<$BlogRSDUrl$>
Wednesday, March 24, 2004
கிரிக்கெட் கனவுகள் 
இந்த ரெண்டு வாரமா எந்த சேனலை பார்த்தாலும், கிரிக்கெட் கிரிக்கெட் கிரிக்கெட். நம்ம பயபுள்ளைங்க
வலைப்பதிவுலையும் கிரிக்கெட்டை கொண்டு வந்துட்டாங்க. அருண் வைத்தியநாதன் ஒவ்வொரு மேட்ச் முடிஞ்சவுடனே
அதப்பத்தி சுடச்சுட எழுதறாரு. இன்னும் கொஞ்சம், நேரமும் ஊக்கமும் கெடச்சா போதும், நம்மாளுங்க சோஹைப் அக்தரும், ஜாகிர் கானும் போடர ஒவ்வொரு பந்தை பத்தியும் எழுதுவாங்க போல.

வெயில் காலத்துல A/C ரூம்லயே வேர்த்து வடிஞ்சுகிட்டு இருக்க, இது போதாதுன்னு இப்பொ கிரிக்கெட் ஜுரம் வேற. ரோட்ல போக முடியலைங்க, கார்ப்பரேசன் வெட்டி வெச்சிருக்கும் குழி ஒரு பக்கம் இருந்தாலும், அந்த குழிக்குள்ளயும் குச்சிய நட்டு வைச்சு கிரிக்கெட் ஆடும் வாண்டுகள் இன்னோர் பக்கம்.

நேத்து சாயுங்காலம் ரோட்ல விளையாடிட்டு இருந்த நண்டுசிண்டுகளால் பெரிய கலாட்டாவே நடந்தது. ஒருவன் "நான் தான் சேவாக்" என்று மார்தட்டிக்கொள்ள, மற்றொருவன் "நான் தான் அக்தர், உன்னை கிளீன் போல்ட் ஆக்கறன் பாரு" என்று சூளுரைத்து பந்து போட, கடைசியில் அக்தர் கனவு புஸ்வானமாக சேவாக் சிக்ஸ்ர் அடித்து கொக்கரித்தார். இந்த களேபரத்தில் பந்து எதிர் வீட்டு மாமியின் கண்ணாடி ஜன்னலை பதம் பார்த்ததை பசங்க கண்டுக்கவேயில்லை. அடுத்த பால்ல உன்னை அவுட் ஆக்கறன் பாருன்னு திரும்ப அக்தர் சூளுரைத்து பந்தை தேடும் போது தான், அது மாமி வீட்டு பெட் ரூமில் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு இருக்கும் விஷயம் தெரியவந்தது. அடுத்த நிமிஷம் சேவாக்கையும் காணல, அக்தரையும் காணல. அப்புறம் பிரச்சினை மேனேஜ்மென்ட் லெவல்ல (அல் அதுதாங்க பெற்றோர்) சமாதானப்படுத்தி சால்வ் ஆனது வேறு விஷயம்.

சரி விஷயத்துக்கு வருவோம்..இன்னைக்கி நடக்கும் மேட்சை பார்த்தே ஆகணும்னு நேத்தே பிளேன் பண்ணி ஆபீஸில் லீவ் சொல்லி வைத்திருந்தேன். பாஸிடம் கெஞ்சி கூத்தாடி லீவ் வாங்குவதற்க்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. மனைவி வேறு, ஊருக்கு போயிருப்பது இன்னும் வசதியா போச்சு. நாளைக்கு காலைல நேரமே எழுந்திருக்க
வேண்டாம் என்ற சந்தோசத்துடன் கிரிக்கெட் கனவுகளுடன் (சும்மானாச்சிக்கும்) தூங்கிக்கொண்டு இருந்த்தவனை ஏழு மணிக்கு மணி அடித்து எழுப்பியது. தூக்கக்கலக்கத்தில அலாரம் வாட்சின் தலையை திருகியும் மணி அடித்துக்கொண்டிருக்க, எரிச்சலுடன் கண் விழித்து பார்த்தால், அடித்தது டெலிபோன் மணி. வாரி சுருட்டிக்கொண்டு போய் ஃபோனை எடுத்தால் எதிர்புறம் என் அருமை மனைவி. அப்புறம் நடந்த உரையாடல் இதோ..

மனைவி : என்னங்க, உங்களுக்கு உடம்பு சரியில்லையாமே?
நான் : இல்லையே நான் நல்லா இருக்கேனே (தூக்க கலக்கத்துல உளரிக் கொட்டிட்டேங்க)
மனைவி : இல்ல உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்க, அது தான் ஃபோன் பண்ணினேன். (போட்டு வாங்குவது இது தானோ??)
நான் : இல்லம்மா நான் நல்லா இருக்கேன். உனக்கு யார் சொன்னது?? (என் மர மண்டைக்கு இப்போ கூட புரியல)
மனைவி : யாரும் சொல்லல, எனக்கு உங்களை பத்தி தான் நல்லா தெரியுமே.... இன்னைக்கி மேட்ச் வேற இருக்கு. மேட்ச் இருந்தா தான் உங்களுக்கு எப்படியாவது உடம்புக்கு வந்திருமே. இன்னைக்கு ஒழுங்கா கட் அடிக்காம ஆஃபீஸ் போற வழிய பாருங்க.

அட தேவுடா, இப்பொ தான் இந்த மர மண்டைக்கு உறைக்குது.

ராவல்பிண்டியிலிருந்து லாகூர் வரை லொங்கு லொங்குன்னு ஓடி வந்து அக்த்ர் போட்ட பந்தை அம்பயர் நோ-பால்ன்னு கூலா சொன்ன மாதிரி போட்டு வச்சிருந்த திட்டத்தை எல்லாம் தவிடு பொடியாக்கினாள் அவள்.

ச்சே ! இவளுக்கு என் பாஸ் எவ்வளவோ தேவலை என்று என்னை நானே நொந்து கொண்டு ஆஃபிஸ் கிளம்பினேன்.

என்ன வாழ்க்கைடா இது? மனுசன் நிம்மதியா ஒரு மேட்ச் கூட பார்க்க முடியறதில்லை. அண்ணே... அருண் அண்ணே இனி திரும்பவும் இந்த மேட்ச் பற்றி நீங்க வலை பதிய மானிட்டர் மேல் விழி வைத்து காத்துகிட்டிருக்கேன்.

மறுமொழிகள் | பின்தொடர்புகள்