<$BlogRSDUrl$>
Wednesday, March 24, 2004
கிரிக்கெட் கனவுகள் - II 
விதியை நொந்து கொண்டே குளித்துக் கிளம்பி அவசர அவசரமாக ஆஃபீஸ் சென்றால் அங்கே ஜே ஜே என்று கூட்டம். என்னை போலவே எல்லோரும் மட்டம் போட்டிருப்பாங்கன்னு மலை போல் நம்பி வந்த என் தலையில் மண்ணென்னைய கொட்டியது போல இருந்தது. காலையில் கூவி எழுப்பி விடும் கோழியவே அடிச்சு கொளம்பு வைச்சு சாப்பிட்டுட்டு பொறுமையா வரும் குப்பனும் சுப்பனும் கூட இன்னிக்கு எனக்கு முன்னால் வந்து சேர்ந்துட்டாங்க. கீழே பார்க்கிங்ல வண்டி நிறுத்த இடம் இல்லாமல் பத்து நிமிஷம் அலைஞ்சப்பவே இப்படி ஏடாகூடமா ஏதாவது நடந்திருக்கும்னு நினைச்சேன்.

அடுத்து லீவ் எடுக்க ஐடியா கொடுத்த நண்பன் ஆச்சரியமா பார்க்க, லீவ் கொடுத்த வள்ளல் (என் பாஸ்) என் கடமையுணர்ச்சியை பெருமையுடன் பார்க்க, இன்னைக்கி இவன் வரமாட்டாங்கற முடிவுடன் என்னுடய இயர்-ஃபோனை சுட்டு கமென்ட்ரி கேட்க செட் பண்ணி வைச்சிருந்த பக்கத்து சீட் நண்பன் சோகமா பார்க்க, மற்றும் என் உற்றார், உறவினர் (டீம் மேட்ஸ்) எல்லாம் பார்க்க, குனிந்த தலை நிமிராமல் என் சீட்டில ஐக்கியமானேன்.

மதிய உணவு இடைவேளை வரை இந்த பூனையும் பால் குடிக்குமான்னு சின்சியரா வேலை செஞ்ச நம்ம பசங்க, இடைவேளைக்கு பிறகு வேற எந்த பூனை பாலை குடிச்சிருக்கும்ன்னு கேள்வி கேக்குற மாதிரி செஞ்சுட்டாங்க. புது மாப்பிள்ளை லட்சுமணன் செஞ்சுரி போட்டப்ப டேபிளை தட்டி ஆர்ப்பாட்டம் பண்ணியவங்க, நம்ம தமிழ்நாட்டு சிங்கம் பாலாஜி சிக்ஸ்ர் அடிச்சு பேட்டை உடைச்சப்ப டேபிள் மேலயே ஏறி ஆட ஆரம்பிச்சுட்டாங்க.

சற்று நேரத்தில் மயான அமைதி என்னை தாக்க தலையை நிமிர்த்திப் பார்த்து வெளவெளத்துப் போனேன். அப்புறம், சிறு கரப்பான்பூச்சிய பார்த்தாலே பயந்து சாகற எனக்கு இவ்வளவு பெரிய அலுவலகத்தில தனியா இருக்க பயம் வராதா என்ன? மணி ஐஞ்சு முடிஞ்சு ஆறு அடிக்கறதுக்கு முன்னால பசங்க பஞ்சா பறந்து வீட்டுக்குப் போயிட்டாங்க. அவசர அவசரமாக ஞாபகத்துக்கு வந்த உம்மாச்சியெல்லாம் துணைக்கு கூப்பிட்டு வண்டிய எடுத்துக் கொண்டு ரோட்டுக்கு வந்தால், மறுபடியும் ஒரே ஆச்சரியம். எப்பவும் நத்தை மாதிரி ஊர்ந்து செல்லும் சாலையில் இன்னைக்கு ஜெட்டு போல சீறிக் கொண்டு செல்லும் அளவுக்கு போக்குவரத்து இருந்தது. ஒரு வழியாக உம்மாச்சி துணையுடன் வீடு வந்து சேர்ந்து டீ.விய போட்டா, பட்டு பட்ன்னு பதான் ரெண்டு விக்கெட்ட அதுக்குள்ள எடுத்திருந்தார். 90க்கு ஆறு விக்கெட் என்று பாக்கிஸ்தான் தத்தளித்துக்கொண்டிருக்க, எப்பவும் மோசமாக ஆடும் மொயின்கான் வந்து மாலிக்குடன் சேர்ந்தார். 90க்கு 6 அப்படீன்னா 105க்கு 7, 120க்கு 8ன்னு ஐஞ்சாப்புல வாத்தியார் சொல்லிக்குடுத்த கணக்கை ஞாபகப்படுத்தி சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தவனின் மன்டையில் மடேர் என்று அடிப்பது போல் ஒரு சிக்ஸர் அடித்தார். மோசமாய் ஆடும் மொயின்கானா இது என்று எண்ணியவனை, பந்தை பவுன்டரிக்கு திரும்ப திரும்ப துரத்தி ஐஞ்சாப்பு வாத்தியாரின் தப்புக் கணக்கை தாளம் போட வைத்தார்.

ஒருவழியாக நகம் அனைத்தயும் கடித்து துப்பி அடுத்து விரலையும் சேர்த்துக் கடிக்க இருந்த நான் பாலாஜி மொயின்கானை பெவிலியனுக்கு அனுப்பியதும் கத்திய காட்டுக் கூச்சலில், தூங்கிக்கொண்டிருந்த பக்கத்து வீட்டு மாமியும் புரியாமல் அலற, என்னவோ ஏதோ என்று மாமாவும் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வர, அதே சமயத்தில் கீழ் வீட்டு வாண்டு பட்டாசு ஒண்றை கொளுத்திப்போட ஒரே களேபரம் தான் போங்க.

ஒரு வழியா வரலாறு படைச்சாச்சு. கோப்பை வென்ற சந்தோஷத்துடன் தூங்க போகிறேன்!!
மறுமொழிகள் | பின்தொடர்புகள்