<$BlogRSDUrl$>
Wednesday, March 24, 2004
கிரிக்கெட் கனவுகள் - II 
விதியை நொந்து கொண்டே குளித்துக் கிளம்பி அவசர அவசரமாக ஆஃபீஸ் சென்றால் அங்கே ஜே ஜே என்று கூட்டம். என்னை போலவே எல்லோரும் மட்டம் போட்டிருப்பாங்கன்னு மலை போல் நம்பி வந்த என் தலையில் மண்ணென்னைய கொட்டியது போல இருந்தது. காலையில் கூவி எழுப்பி விடும் கோழியவே அடிச்சு கொளம்பு வைச்சு சாப்பிட்டுட்டு பொறுமையா வரும் குப்பனும் சுப்பனும் கூட இன்னிக்கு எனக்கு முன்னால் வந்து சேர்ந்துட்டாங்க. கீழே பார்க்கிங்ல வண்டி நிறுத்த இடம் இல்லாமல் பத்து நிமிஷம் அலைஞ்சப்பவே இப்படி ஏடாகூடமா ஏதாவது நடந்திருக்கும்னு நினைச்சேன்.

அடுத்து லீவ் எடுக்க ஐடியா கொடுத்த நண்பன் ஆச்சரியமா பார்க்க, லீவ் கொடுத்த வள்ளல் (என் பாஸ்) என் கடமையுணர்ச்சியை பெருமையுடன் பார்க்க, இன்னைக்கி இவன் வரமாட்டாங்கற முடிவுடன் என்னுடய இயர்-ஃபோனை சுட்டு கமென்ட்ரி கேட்க செட் பண்ணி வைச்சிருந்த பக்கத்து சீட் நண்பன் சோகமா பார்க்க, மற்றும் என் உற்றார், உறவினர் (டீம் மேட்ஸ்) எல்லாம் பார்க்க, குனிந்த தலை நிமிராமல் என் சீட்டில ஐக்கியமானேன்.

மதிய உணவு இடைவேளை வரை இந்த பூனையும் பால் குடிக்குமான்னு சின்சியரா வேலை செஞ்ச நம்ம பசங்க, இடைவேளைக்கு பிறகு வேற எந்த பூனை பாலை குடிச்சிருக்கும்ன்னு கேள்வி கேக்குற மாதிரி செஞ்சுட்டாங்க. புது மாப்பிள்ளை லட்சுமணன் செஞ்சுரி போட்டப்ப டேபிளை தட்டி ஆர்ப்பாட்டம் பண்ணியவங்க, நம்ம தமிழ்நாட்டு சிங்கம் பாலாஜி சிக்ஸ்ர் அடிச்சு பேட்டை உடைச்சப்ப டேபிள் மேலயே ஏறி ஆட ஆரம்பிச்சுட்டாங்க.

சற்று நேரத்தில் மயான அமைதி என்னை தாக்க தலையை நிமிர்த்திப் பார்த்து வெளவெளத்துப் போனேன். அப்புறம், சிறு கரப்பான்பூச்சிய பார்த்தாலே பயந்து சாகற எனக்கு இவ்வளவு பெரிய அலுவலகத்தில தனியா இருக்க பயம் வராதா என்ன? மணி ஐஞ்சு முடிஞ்சு ஆறு அடிக்கறதுக்கு முன்னால பசங்க பஞ்சா பறந்து வீட்டுக்குப் போயிட்டாங்க. அவசர அவசரமாக ஞாபகத்துக்கு வந்த உம்மாச்சியெல்லாம் துணைக்கு கூப்பிட்டு வண்டிய எடுத்துக் கொண்டு ரோட்டுக்கு வந்தால், மறுபடியும் ஒரே ஆச்சரியம். எப்பவும் நத்தை மாதிரி ஊர்ந்து செல்லும் சாலையில் இன்னைக்கு ஜெட்டு போல சீறிக் கொண்டு செல்லும் அளவுக்கு போக்குவரத்து இருந்தது. ஒரு வழியாக உம்மாச்சி துணையுடன் வீடு வந்து சேர்ந்து டீ.விய போட்டா, பட்டு பட்ன்னு பதான் ரெண்டு விக்கெட்ட அதுக்குள்ள எடுத்திருந்தார். 90க்கு ஆறு விக்கெட் என்று பாக்கிஸ்தான் தத்தளித்துக்கொண்டிருக்க, எப்பவும் மோசமாக ஆடும் மொயின்கான் வந்து மாலிக்குடன் சேர்ந்தார். 90க்கு 6 அப்படீன்னா 105க்கு 7, 120க்கு 8ன்னு ஐஞ்சாப்புல வாத்தியார் சொல்லிக்குடுத்த கணக்கை ஞாபகப்படுத்தி சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தவனின் மன்டையில் மடேர் என்று அடிப்பது போல் ஒரு சிக்ஸர் அடித்தார். மோசமாய் ஆடும் மொயின்கானா இது என்று எண்ணியவனை, பந்தை பவுன்டரிக்கு திரும்ப திரும்ப துரத்தி ஐஞ்சாப்பு வாத்தியாரின் தப்புக் கணக்கை தாளம் போட வைத்தார்.

ஒருவழியாக நகம் அனைத்தயும் கடித்து துப்பி அடுத்து விரலையும் சேர்த்துக் கடிக்க இருந்த நான் பாலாஜி மொயின்கானை பெவிலியனுக்கு அனுப்பியதும் கத்திய காட்டுக் கூச்சலில், தூங்கிக்கொண்டிருந்த பக்கத்து வீட்டு மாமியும் புரியாமல் அலற, என்னவோ ஏதோ என்று மாமாவும் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வர, அதே சமயத்தில் கீழ் வீட்டு வாண்டு பட்டாசு ஒண்றை கொளுத்திப்போட ஒரே களேபரம் தான் போங்க.

ஒரு வழியா வரலாறு படைச்சாச்சு. கோப்பை வென்ற சந்தோஷத்துடன் தூங்க போகிறேன்!!
மறுமொழிகள் | பின்தொடர்புகள்

கிரிக்கெட் கனவுகள் 
இந்த ரெண்டு வாரமா எந்த சேனலை பார்த்தாலும், கிரிக்கெட் கிரிக்கெட் கிரிக்கெட். நம்ம பயபுள்ளைங்க
வலைப்பதிவுலையும் கிரிக்கெட்டை கொண்டு வந்துட்டாங்க. அருண் வைத்தியநாதன் ஒவ்வொரு மேட்ச் முடிஞ்சவுடனே
அதப்பத்தி சுடச்சுட எழுதறாரு. இன்னும் கொஞ்சம், நேரமும் ஊக்கமும் கெடச்சா போதும், நம்மாளுங்க சோஹைப் அக்தரும், ஜாகிர் கானும் போடர ஒவ்வொரு பந்தை பத்தியும் எழுதுவாங்க போல.

வெயில் காலத்துல A/C ரூம்லயே வேர்த்து வடிஞ்சுகிட்டு இருக்க, இது போதாதுன்னு இப்பொ கிரிக்கெட் ஜுரம் வேற. ரோட்ல போக முடியலைங்க, கார்ப்பரேசன் வெட்டி வெச்சிருக்கும் குழி ஒரு பக்கம் இருந்தாலும், அந்த குழிக்குள்ளயும் குச்சிய நட்டு வைச்சு கிரிக்கெட் ஆடும் வாண்டுகள் இன்னோர் பக்கம்.

நேத்து சாயுங்காலம் ரோட்ல விளையாடிட்டு இருந்த நண்டுசிண்டுகளால் பெரிய கலாட்டாவே நடந்தது. ஒருவன் "நான் தான் சேவாக்" என்று மார்தட்டிக்கொள்ள, மற்றொருவன் "நான் தான் அக்தர், உன்னை கிளீன் போல்ட் ஆக்கறன் பாரு" என்று சூளுரைத்து பந்து போட, கடைசியில் அக்தர் கனவு புஸ்வானமாக சேவாக் சிக்ஸ்ர் அடித்து கொக்கரித்தார். இந்த களேபரத்தில் பந்து எதிர் வீட்டு மாமியின் கண்ணாடி ஜன்னலை பதம் பார்த்ததை பசங்க கண்டுக்கவேயில்லை. அடுத்த பால்ல உன்னை அவுட் ஆக்கறன் பாருன்னு திரும்ப அக்தர் சூளுரைத்து பந்தை தேடும் போது தான், அது மாமி வீட்டு பெட் ரூமில் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு இருக்கும் விஷயம் தெரியவந்தது. அடுத்த நிமிஷம் சேவாக்கையும் காணல, அக்தரையும் காணல. அப்புறம் பிரச்சினை மேனேஜ்மென்ட் லெவல்ல (அல் அதுதாங்க பெற்றோர்) சமாதானப்படுத்தி சால்வ் ஆனது வேறு விஷயம்.

சரி விஷயத்துக்கு வருவோம்..இன்னைக்கி நடக்கும் மேட்சை பார்த்தே ஆகணும்னு நேத்தே பிளேன் பண்ணி ஆபீஸில் லீவ் சொல்லி வைத்திருந்தேன். பாஸிடம் கெஞ்சி கூத்தாடி லீவ் வாங்குவதற்க்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. மனைவி வேறு, ஊருக்கு போயிருப்பது இன்னும் வசதியா போச்சு. நாளைக்கு காலைல நேரமே எழுந்திருக்க
வேண்டாம் என்ற சந்தோசத்துடன் கிரிக்கெட் கனவுகளுடன் (சும்மானாச்சிக்கும்) தூங்கிக்கொண்டு இருந்த்தவனை ஏழு மணிக்கு மணி அடித்து எழுப்பியது. தூக்கக்கலக்கத்தில அலாரம் வாட்சின் தலையை திருகியும் மணி அடித்துக்கொண்டிருக்க, எரிச்சலுடன் கண் விழித்து பார்த்தால், அடித்தது டெலிபோன் மணி. வாரி சுருட்டிக்கொண்டு போய் ஃபோனை எடுத்தால் எதிர்புறம் என் அருமை மனைவி. அப்புறம் நடந்த உரையாடல் இதோ..

மனைவி : என்னங்க, உங்களுக்கு உடம்பு சரியில்லையாமே?
நான் : இல்லையே நான் நல்லா இருக்கேனே (தூக்க கலக்கத்துல உளரிக் கொட்டிட்டேங்க)
மனைவி : இல்ல உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்க, அது தான் ஃபோன் பண்ணினேன். (போட்டு வாங்குவது இது தானோ??)
நான் : இல்லம்மா நான் நல்லா இருக்கேன். உனக்கு யார் சொன்னது?? (என் மர மண்டைக்கு இப்போ கூட புரியல)
மனைவி : யாரும் சொல்லல, எனக்கு உங்களை பத்தி தான் நல்லா தெரியுமே.... இன்னைக்கி மேட்ச் வேற இருக்கு. மேட்ச் இருந்தா தான் உங்களுக்கு எப்படியாவது உடம்புக்கு வந்திருமே. இன்னைக்கு ஒழுங்கா கட் அடிக்காம ஆஃபீஸ் போற வழிய பாருங்க.

அட தேவுடா, இப்பொ தான் இந்த மர மண்டைக்கு உறைக்குது.

ராவல்பிண்டியிலிருந்து லாகூர் வரை லொங்கு லொங்குன்னு ஓடி வந்து அக்த்ர் போட்ட பந்தை அம்பயர் நோ-பால்ன்னு கூலா சொன்ன மாதிரி போட்டு வச்சிருந்த திட்டத்தை எல்லாம் தவிடு பொடியாக்கினாள் அவள்.

ச்சே ! இவளுக்கு என் பாஸ் எவ்வளவோ தேவலை என்று என்னை நானே நொந்து கொண்டு ஆஃபிஸ் கிளம்பினேன்.

என்ன வாழ்க்கைடா இது? மனுசன் நிம்மதியா ஒரு மேட்ச் கூட பார்க்க முடியறதில்லை. அண்ணே... அருண் அண்ணே இனி திரும்பவும் இந்த மேட்ச் பற்றி நீங்க வலை பதிய மானிட்டர் மேல் விழி வைத்து காத்துகிட்டிருக்கேன்.

மறுமொழிகள் | பின்தொடர்புகள்

Tuesday, March 23, 2004
சாவி கிடைச்சாச்சு 
இதோ எனது வலைக்கதவு திறந்துவிட்டது. கஷ்டப்பட்டு சாவி போட்டு கதவை திறந்து உள்ளே வந்தாச்சு.
அடுத்து என்ன?
அடுத்து என்ன?
அடுத்து என்ன?
இங்கே என்ன எழுதறது? எப்படி எழுதறது?
மில்லியன் டால்ர் கேள்வியா இது? விடை கிடைக்க மாட்டேங்குதே...
அட அரை மணி நேரமா யோசிக்கிறேங்க... ம்ஹூம் இது சரிப்பட்டு வராது.
சரி சுத்தி இருக்கிற வலைப்பின்னல்களை சுத்தி பார்க்கலாம்ன்னா தலை சுத்தி மயக்கம் வராதது மட்டும் தான் பாக்கி.
யப்பா என்ன இது தமிழ்ல இவ்வளவு வலைப்பின்னல்களா? அத்தனையும் தனக்கென ஒரு தனி முத்திரையுடன்.
இந்தப்பக்கம் பார்த்தா ஒருத்தரு கிறுக்கறாரு, அந்தப்பக்கம் ஒருத்தரு சத்தமே இல்லாம ஆப்பு வைக்கறாரு.
அவர் சிந்தனையை சிதறவிட்டா, இவர் எண்ணங்களை பகிர்ந்துக்கிறாரு.
இதெல்லாம் சரிப்பா, நீ என்ன செய்யப்போற அத மொதல்ல சொல்லு அப்படின்னு நீங்க சொல்லறது சத்தமாவே கேட்குது.

ஃபோன் பண்ணி நண்பனிடம் கேட்டா...மச்சி கவிதை எழுதுடான்னு பொசுக்குனு சொல்லிட்டான், ஆனா கடைசி வரைக்கும் கவிதைன்னா என்னன்னு சொல்லவே இல்லை பாருங்க.

கதை எழுதலாமா?? சரி நல்லா எழுதலாம். சின்ன வயசுல படிச்ச பாட்டி வடை சுட்ட கதை மட்டும் தான் தெரியும், அது தான் எல்லோருக்கும் தெரியுமே அதை யாரு படிப்பாங்க??

கட்டுரை?? நடுவுல நானே தூங்கிட்டன்னா?? சிவராத்திரி அன்னிக்கு ட்ரை பண்ணி பார்க்கலாம்.

இதோ... வலையை சுத்துனப்போ நண்பர் காசி ஆறுமுகம் வலை பரப்ப கூப்பிடறது காதுல விழுந்தது. அவர் சொன்ன மாதிரியே செய்யலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

அட அதுதாங்க, என்னை சுத்தி நடக்கறது, நான் நடக்கறது, என்னை நடக்க வைக்கறது, எனக்கு உள்ளே / வெளியே நடக்கிறது, என்னை பத்தி நீங்க நினைக்கிறது, உங்களை பத்தி நான் நினைக்கிறது இதை எல்லாம் நானே... நான் மட்டுமே சொந்தமா எழுதப்போறேன். அதுவும் கொங்கு தமிழும் இங்கிலீசும் கலந்த ஒரு காக்டெயில் கலவையா எழுதலாம்னு இருக்கேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?

சரி... நான் ரெடி.... நீங்க ரெடியா ??

ஒரு நிமிஷம்... நானும் தமிழ்ல்ல யுனிக்கோட் முறையில எழுதறதுக்கு உதவி செஞ்ச நண்பர் சங்கருக்கு நன்றி சொல்லிக்கறேங்க.

சங்கர் அண்ணே ரொம்ப டேங்க்ஸ் :)
மறுமொழிகள் | பின்தொடர்புகள்