<$BlogRSDUrl$>
Friday, April 16, 2004
வாக்காளர் பட்டியல் 
மாவட்ட வாரியான வாக்காளர் பட்டியல் இங்கே..உங்க பெயர் இருக்கா??? பொறுமை இருந்தா பார்த்து தெரிஞ்சுகுங்க!! நானும் என் பெயரை தேடி பார்த்துகிட்டு இருக்கேன். உங்க பெயரை கண்டுபிடிச்சா சொல்லுங்க...யாரு மொதல்ல கண்டுபிடிக்கறாங்கன்னு பார்ப்போம் ;)
மறுமொழிகள் | பின்தொடர்புகள்

ஒரு நெருடல்.. 

ராகுல் டிராவிட் - இவரை "The Wall"," Great Wall of India", இன்னும் எப்படி வேண்டும் என்றாலும் அழைக்கலாம். அதற்கு அவருக்கு முழு தகுதியுள்ளது. இவருக்கு யார் இந்த பெயர் கொடுத்தது என்பதை பத்ரி இன்று அவரது வலைப்பதிவில் விளக்கியுள்ளார்.


இவரது பொறுமை தான் எப்பொழுதும் இந்தியாவிற்கு வெற்றியீட்டி தருகிறது. இவர் எப்பொழுதெல்லாம் பொறுமையாக ஆடினாரோ அப்பொழுதெல்லாம் இந்தியா வெற்றிபெற்றிருக்கிறது, அல்லது தோல்வியை தவிர்த்திருக்கிறது. பொறுமை மட்டும் இல்லாது இவரது துணிச்சலும், முடிவு எடுக்கும் திறனும் பெரிதும் பாராட்டப்படுகிறது. முல்தானில் நடைபெற்ற முதல் டெஸ்டில் டெண்டுல்கர் 194 ரன் எடுத்து, 200 நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த பொழுது, இவர் ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக டிக்ளெர் செய்து அனைவரையும் அதிர்ச்சியுறச்செய்தார். இன்சமாம் இதை குறிப்பிட்டு "நான் டெண்டுல்கரின் காப்டனாக இருந்தால் கன்டிப்பாக அவர் இரட்டை சதம் அடிக்கும் வரை பொறுத்திருப்பேன்" என்றார். பலரும் பலவிதமாக இதை பற்றி விமர்சித்தாலும் இவரது குறிக்கோள் ஒன்றே...வெற்றி.....வெற்றி........வெற்றி.


இன்று இத்தொடரை இந்தியா வென்றதற்கு முழு காரணமும் ராகுல் டிராவிட் தான். இவர் 495 பந்துகளை சந்தித்து 270 ரன்கள் எடுத்து இந்தியாவை வலுவான நிலைக்கு அழைத்து சென்றார். ஆட்டத்தின் முதல் நாள் வீசப்பட்ட முதல் பந்தை தவிர கடந்த நான்கு நாட்களும் களத்தில் இருந்திருக்கிறார். ஆனால் ஆட்டத்தின் மூன்றாம் நாளில் இவர் அடித்த ஒரு பந்து மட்டையிலும், பேடிலும் பட்டு விக்கட்கீப்பர் கைகளில் கேட்சாக மாறியது. அம்பயரினால் தெளிவாக முடிவு எடுக்க முடியாமல் benefit of doubt படி நாட் அவுட் என்று கூறிவிட்டார். ஆனால் டிராவிடுக்கு தான் அவுட் என்று நன்றாக தெரிந்தும் ஏன் அவர் தானாக வெளியே வரவில்லை. கிரிக்கெட் என்பது gentlemen game இல்லையா?? இதில் தவறுகள் நடக்கலாம், ஆனால் தெரிந்தே தவறு செய்யலாமா? அதுவும் மேற்கூறிய அனைத்து பெருமைகளும் கொண்ட இந்திய அணியின் துனை கேப்டன் செய்யலாமா? தான் அவுட் என்று தெரிந்ததும், அம்பயரின் முடிவுக்காக காத்திராமல் எத்தனையோ வீரர்கள் தாமாக வெளியேறியதை இவர் கண்டதில்லையா, இல்லை இவருக்கு ஆட்டம் கற்றுக்கொடுத்த சீனியர்கள் இதை கற்றுத்தரவில்லையா?? கவாஸ்கரும், டெண்டுல்கரும், ஸ்டீவ் வாகும் இப்படி தாமாக வெளியேறியதை இவர் பார்த்ததே இல்லை போலும்.


இதை விட கொடுமை நேற்றைய தொலைகாட்சி நிகழ்ச்சியொன்றில் ரவி சாஸ்திரியிடமும், வசிம் அக்ரமிடமும் இதே கேள்வி கேட்கப்பட்டது. அவர்கள் இருவரும் கூறிய பதில் மிகவும் அபத்தமானது.


ரவிசாஸ்திரி : டிராவிட் ஏன் வெளியேற வேண்டும், நடுவர் என்பவர், முடிவெடுப்பதற்காவே இருக்கிறார். இந்த சூழ்நிலையில் நானாக இருந்தாலும் இதை தான் செய்திருப்பேன்.


இவரது பதிலில் game spirit அடிபட்டு சின்னாபின்னமானதை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. கிரிக்கெட் வீரர்களை, வீரர்களாக பார்க்காமல் கடவுளாக வழிபடும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு இது ஒரு தவறான எடுத்துக்காட்டாக இருக்கும் ஏன் புரிந்துகொள்ளவில்லை??


வசிம் அக்ரம் : டிராவிட் செய்தது மிக சரி. நடுவர்களுக்கு பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்படுகிறது. அதனால் அவர்களது வேலையை சரியாக செய்ய வேண்டும். இது ஆட்டத்தில் சகஜம், இதை பெரிதுபடுத்தாமல் ஜாலியாக எடுத்துக்கொள்ளவேண்டும்


சம்பளம் கொடுக்கிறார்கள்...சரி. அதற்காக அவர்கள் படும் சிரமத்தையும் கருத்தில் கொள்ளவேண்டுமல்லவா? ஐந்து நாள் நடைபெறும் போட்டியில் போடப்படும் ஒவ்வோரு பந்தையும் அவர்கள் கவனிக்க வேண்டும். அதில் இது போன்ற சிரமமான முடிவுகளை எடுக்க தடுமாறுவது சகஜம். (அதற்காக ஸ்டீவ் பக்னர் செய்வது சரி என்று சொல்லவில்லை). அந்த மாதிரி நேரங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வது சண்டைக்கு வேண்டுமென்றால் சரி வரும் ஆனால் இது விளையாட்டுக்கு சரிவராது.


தொடரை வென்றாலும் மனதில் ஒரு சிறு நெருடல்.....


மறுமொழிகள் | பின்தொடர்புகள்

Wednesday, April 14, 2004
நோகாம நொங்கு!! 
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி இந்த மாதத்திலிருந்து ஏ.டி.எம் ல (ATM) பணம் எடுக்க கட்டணம் வசூலிக்கப்போகிறதாம். முழு செய்தியை இங்கு படிக்கவும். இது முன்பே எதிர்பார்த்த செய்தி என்றாலும், அவர்கள் வசூலிக்க இருக்கும் கட்டணம் மிக அதிகம். இவங்கள தொடர்ந்து மேலும் சில தனியார் வங்கிளும் கட்டண முறையை அமல்படுத்த இருக்கின்றன (செய்தி). இத பத்தி அவுங்க கஸ்டமர் கேர் நம்பருக்கு ஃபோன் பண்ணி கேட்டா, அவுங்களுக்கே முழு விஷயமும் சரியா தெரியல.
என்னங்க இது அநியாயமா இருக்கு..ஒரு டிரேன்சாக்சனுக்கு 50 ரூபாயா?? என்னை போல அடிக்கடி பர்ஸை தொலைக்கும் ஆசாமிகள், பர்ஸ்ல காசு இருந்தா உடனே வெட்டி செலவு செய்துவிடும் ஆசாமிகள், மாசக் கடைசில மத்த எல்லோரும் ஏ.டி.ஏம் ல எடுக்கறதே நூறோ இருநூறோ...அதுக்கு அம்பது ரூவா தண்டம் அழுவனுமா?? இத விட குறைந்த பட்ச சேமிப்பு தொகை இல்லைனா 750 ரூபா தண்டம் அழுவனுமாம்பா. இது முன்ன இருந்ததை விட 3 மடங்கு அதிகம். இப்படியே போனா சம்பாரிக்கற காசு மொத்தத்தயும் இவங்க புடிங்கிக்குவாங்க போல. இது தான் நோகாம நொங்கு திங்கறதோ?? இப்பெல்லாம் திருடனை கண்டால் கூட அடிச்சு விரட்டும் தைரியம் வருது, ஆனா போலீசை கண்டால் தான் பயந்து நடுங்க வேண்டியிருக்கு. அது போல பணத்தை வங்கியில போடனும்னா கூட ... ஹ்ம்ம் என்னத்த சொல்றது!!

மறுமொழிகள் | பின்தொடர்புகள்

Tuesday, April 13, 2004
எங்கே செல்கிறோம்...???? 
இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விஜய் டிவியில் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகியது. ஆபிஸ் கிளம்பும் அவசரத்தில் நான் கண்ட, என்னை யோசிக்க வைத்த (நீ யோசிச்சயா??? அத நான் நம்பனுமான்னு கேட்கிறீங்களா...நம்புங்க!!) சில விசயங்கள்...

பொதுவாவே லியோனியின் பட்டிமன்றம்னா நக்கலுக்கும், கிண்டலுக்கும் குறையிருக்காது. இந்த பட்டிமன்றமும் என்னவோ சிரிக்க வைக்க தான் என்றாலும், சிலர் பேசிய கருத்துக்கள் சிந்திக்கவும் வைத்தது. குறிப்பாக ஒரு சின்ன எடுத்துக்காட்டு..... இது என்னவோ பெரிய லெவல் மேட்டர்ன்னு கற்பனையெல்லாம் பண்ணாதீங்க..அது நம் அன்றாட பிரச்சணையான கக்கூஸ் மேட்டர் தான். மக்களின் இந்த தலையாய பிரச்சனைய தீர்க்க முக்கியமான இடங்களில் கட்டண கழிப்பிடங்கள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பெங்களுரில கூட இப்படி நிறைய கட்டியிருக்காங்க. ஆனா பாதிக்குமேல இன்னும் திறப்புவிழா காணாமலே இருக்கிறது. மிச்சம் இருக்கிற சிலது அரசாங்கத்துக்கும், கான்ட்ராக்டர்களுக்கும் பேரம் படியாமல் பூட்டியே கிடக்கிறது. பேருந்து நிறுத்தத்தில் இருக்கிற பொது கழிப்பிடத்தை நம் மக்கள் மதிப்பதே இல்லை, அதன் வெளிப்புற சுவரை பாழடிப்பதிலேயே கவனமாக இருக்காங்க. அதிசயமாக திறந்திருக்கும் சில கட்டண கழிப்பிடங்களின் நிலமையோ பொதுக்கழிப்பிடங்களை விட கேவலமாகவே உள்ளது. ஆத்திர அவசரத்துக்கு கூட காசு வாங்குனா, அட மனுசன் எங்கதான்யா போவான்...

கவிஞர் நந்தலாலா சொன்னாரு, இந்தியாவில் மட்டும் தான் கட்டண கழிப்பிடம் இருக்குதாம், மற்ற நாடுகளில் கழிப்பிடங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லையாம். (ஏங்க அப்படியா? தெரிஞ்சவுங்க கொஞ்சம் சொல்லுங்க). அங்கே அப்படியே காற்றாட வெளியே போனால், பிடித்து மாமியார் வீட்டுக்கு அனுப்பிவிடுவாங்க, ஆனா இங்கயோ கட்டண கழிப்பிடங்கள் இருப்பதே மக்கள காற்றாட வெளிய
போக வைக்கத்தான் போல!! இதுல வேற நவீன கட்டண கழிப்பிடம்ன்னு போர்டு வைச்சுகிறாங்க.. இதுல போய் என்ன நவீனம்ன்னு தெரியல :(

அடுத்தது மக்களின் மனப்பாண்மை பற்றி கவிஞர் நந்தலாலா பேசியதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா எங்கே யாருடன் விளையாடினாலும் டிவி முன்னாடி பழிகிடந்து டென்சன்ல நகம் எது விரல் எதுன்னு கூட தெரியாம கடிச்சு துப்பி, நாலு நாளைக்கு கட்டு போட்டுட்டு திரியராங்க.(நான் கூட அப்படித்தான்) ஒரு சின்ன விளையாட்டு, இதுக்கு போய் அடிதடி நடக்கற அளவுக்கு போயிடறாங்க. ஆனா ஈராக் மேல அமெரிக்கா குண்டு போடறத கால் மேல கால் போட்டு கடலக்காயை கொறிச்சுகிட்டே ஜாலியா பார்க்கிறாங்க. அது பத்தாதுன்னு "நல்லா பாம் போடுறான்யா...என்னமா வெடிக்குதுன்னு" கமென்ட் வேற. இத அவரு காமெடிக்காக சொன்னாலும் மக்கள் மனப்பான்மை வேற எங்கயோ போயிட்டிருக்குன்னு மட்டும் தெரியுது.

இதுக்கு மேல பார்க்க விடாம கடமை அழைத்தால், லியோனிக்கும், நந்தலாலாவுக்கும் டாட்டா காட்டிவிட்டு விட்டேன் ஜூட் (ஆபீஸுக்குதாங்க).

புத்தாண்டு வாழ்த்துக்களுடன் மறுபடியும் ஒரு தடவை ஜூட் விட்டுக்கிறேன்...வ்வர்ட்டா!!
மறுமொழிகள் | பின்தொடர்புகள்